August 28, 2015
கோடை காலங்களில் தண்ணீரின்றி மரக்கன்றுகள் காய்ந்து விடாமல் செழிப்புடன் வளர மண்பாண்ட தொழில் நுட்பம்
அரியலூர் மாவட்டத்தில் மண்பாண்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மரக்கன்று நடும் திட்டம் அறிமுகமானது.
அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் மண்பாண்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி முதற்கட்டமாக துவங்கப்பட்டுள்ளது.
பெரியநாகலூரில் இருந்து சின்னநாகலூர் வரை சாலையில் இருபுறமும் 200 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.
ஒவ்வொரு மரக்கன்று நடப்படும் போது அதன் வேருக்கு அருகில் ஒரு மண்பானையை வைத்து அதன் கழுத்துப்பகுதிவரை மண்ணால் மூட வேண்டும். முன்னதாக பானைக்கு பக்கவாட்டில் சிறிய ஓட்டைபோட்டு, ஓட்டையை காட்டன் துணியால் மூடவேண்டும். அந்த ஓட்டை மரக்கன்றின் வேர் இருக்கும் பக்கமாக திருப்பி வைக்க வேண்டும். பின்னர் பானையில் தண்ணீரை நிரப்பினால் பானையில் உள்ள ஓட்டை வழியாக தண்ணீர் சிறிது சிறிதாக கசிந்து மரக்கன்றுகளுக்கு தண்ணீர் போய்ச் சேரும். இதன் மூலம் மரக்கன்று நட்ட இடத்தில் தொடர்ந்து ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும். மரக்கன்றும் வாடாமல் நன்கு வளருவதற்கு ஏதுவாக இருக்கும்.
இதன் மூலம் தண்ணீரும் மிச்சமாகும். கோடை காலங்களில் தண்ணீரின்றி மரக்கன்றுகள் காய்ந்து விடாமல் செழிப்புடன் வளர மண்பாண்ட தொழில் நுட்பம் மிகவும் உகந்தது.